புதன், 8 செப்டம்பர், 2010

மருத்துவக்குடி-ஐராவதேஸ்வரர் அபிராமி அம்மை.ஆடுதுறைக்கு தெற்கே 1 கி.மீ. தொலைவில் உள்ளது.

மருத்துவக்குடி-ஐராவதேஸ்வரர்


தலமும்இருப்பிடமும்:
ஆடுதுறைக்கு தெற்கே 1 கி.மீ. தொலைவில் உள்ளது.

தலப்பெயர்கள்:இடைகுளம்.

மூர்த்திகள்:
இறைவன்:ஐராவதேஸ்வரர்.
இறைவி:அபிராமி அம்மை.

தீர்த்தங்கள்:சந்திர புஷ்கரினி
 

தலப்பெருமை:
ஐராவதம் இத்தல இறைவனை வணங்கி பேறு பெற்றதால் இறைவனுக்கு ஐராவதேஸ்வரர் என்று பெயர். சந்திரன் இத்தலத்திற்கு வந்து சாபவிமோசனம் பெற்றதால் இத்தல தீர்த்தம்  சந்திர தீர்த்தம் என்று பெயர் ஸ்ரீ கிருஷ்ணர் வழிபட்டு ருக்மிணி தேவியை அடைந்ததும், ஸ்ரீ ஆதிஷேசன் வழிபட்டு பூமிதேவியைத் தாங்கும் வலிமையையும் பெற்ற தலம்.
தேவார பாடல்:
திருநாவுக்கரசர் அருளிய திருத்தாண்டகத்தில் போற்றப்பட்டுள்ளது.
தலச்சிறப்பு:
அகத்திய முனிவர் வழிபட்டதலம்.  இத்தலத்தில் முருகன் மீது அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் பெற்றது.

ஸ்ரீ மனோக்கியநாத சுவாமி, நீலகண்டேஸ்வரர் திருநீலக்குடி

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருநீலக்குடி
இறைவன் பெயர்ஸ்ரீ மனோக்கியநாத சுவாமி, நீலகண்டேஸ்வரர்
இறைவி பெயர்ஸ்ரீபக்தபீஷ்டப்பிரதாயனி(தவக்கோல அம்மை), ஸ்ரீ அனூபமஸ்தநி (அழகாம்பிகை)
பதிகம்திருநாவுக்கரசர் - 1
எப்படிப் போவது கும்பகோணம் - காரைக்கால் சாலையில் கும்பகோணத்தில் இருந்து 16 கி.மி. தொலைவில் உள்ளது தென்னலக்குடி என்ற திருநீலக்குடி. அருகில் உள்ள ரயில் நிலையம் ஆடுதுறை 4 கி.மி. தொலைவில் இருக்கிறது. ஆடுதுறையில் இருந்ததும் திருநீலக்குடி வர சாலை வசதி உள்ளது. சாலையோரத்தில் கோயில் உள்ளது.
ஆலய முகவரி அருள்மிகு
ஸ்ரீ மனோக்கியநாத சுவாமி திருக்கோவில்
திருநீலக்குடி அஞ்சல்
திருவிடைமருதூர் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம்
PIN - 612108

இவ்வாலயம் காலை 6 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் 8 மணி வரையும் திறந்திருக்கும்.
தல வரலாறு: மிருகண்டு முனிவர், அவரின் மனைவி புத்திரப் பேறு வேண்டி இறைவனை வழிபட்டு வந்தனர். அவர்கள் பக்திக்கு மெச்சி இறைவன் அவர்கள் முன் தோன்றி ஆயிரம் ஆண்டுகள் வாழும் துர்க்குணங்கள் நிறைந்த மகன் வேண்டுமா அல்லது 16 வயது வரை மட்டும் வாழும் தலைசிறந்த மகன் வேண்டுமா என்று கேட்க மிருகண்டு தமபதியினர் 16 வயது மகனே வேண்டும் என்று வரம் கேட்டனர். மிருகண்டு தம்பதியருக்கு இறைவன் அருளால் பிறந்த மார்க்கண்டேயர் சிறந்த சிவபக்தராக விளங்கினார். அவருக்கு 16 வயது நடக்கும் போது அவரின் பெற்றோர் இறைவன் கூறியபடி விதிக்கப்பட்ட ஆயுள் 16 வயது தான் என்பதை மார்க்கண்டேயருக்கு கூறினர். சிவபெருமானே அவரின் ஆயுளைக் காக்க முடியும் என்று மார்க்கண்டேயர் ஒவ்வொரு சிவஸ்தலமாக தரிசித்து வரும் போது திருநீலக்குடி தலத்திற்கும் வந்து ஈசனை வழிபட்டார். இங்கு வந்து நாளும் பொழுதும் சிவபெருமானை எண்ணி தியானிக்கிறார். முடிவில் இறைவன் அவர் முன் தோன்றினார். உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்கிறார். மார்க்கண்டேயர் தமது விருப்பத்தை சொன்னவுடன் அதுபடியே மார்க்கண்டேயருக்கு இத்தலத்தில் சிரஞ்சீவியாக இருக்க ஈசன் வரம் அளித்தார். அத்தகைய சிறப்பு பெற்ற தலம் திருநீலக்குடி
பாற்கடலை அமிர்தம் பெற வேண்டி தேவர்களும், அசுரர்களும் கடைந்த போது வெளிப்பட்ட ஆலகால விஷத்தை சிவபெருமான் உண்டார். அது அவர் வநிற்றுக்குள் செல்லாமல் தடுக்க உமை அவரின் கழுத்தைப் பிடிக்க விஷம் அவர் கழுத்தில் தங்கியது. இறைவனும் நீலகண்டேஸ்வரர் என்று பெயர் பெற்றார்.
தலத்தின் சிறப்பு: இத்தலத்தில் இறைவன் நீலகண்டேஸ்வரருக்கு செய்யப்படும் நல்லெண்ணய் அபிஷேகம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இங்குள்ள மூலவருக்கு எண்ணெய்யால் அபிசேகம் செய்யும்போது பாத்திரம் பாத்திரமாக நிறைய எண்ணெய்யை சுவாமியின் மீது ஊற்றி அபிஷேகம் செய்வார்கள். எவ்வளவு எண்ணெய் ஊற்றி அபிஷேகம் செய்தாலும் அத்தனையும் சிவலிங்கத்திற்கு உள்ளேயே உறிஞ்சப்பட்டு விடுவது அதிசயமாக உள்ளது. நாள் பூராவும் எணணெய் அபிஷேகம் செய்தாலும் அத்தனையும் உறிஞ்சப்பட்டு விடுகிறது. இதில் ஆச்சர்யம் என்னவெனில் அபிசேகம் செய்த அடுத்த நாள் சுவாமியை பார்த்தால் அவரது சிவலிங்கத் திருமேனி கிட்டதட்ட 1 வருடமாக எண்ணெயே தடவாவது போல் அவ்வளவு உலர்ந்து காய்ந்து காணப்படும்.அபிஷேகம் செய்யப்படும் எண்ணெயெல்லாம் எங்கு மாயமாகிறது என்பது இத்தனை காலமும் யாருக்கும் புலப்படவில்லை. எண்ணெய் அபிஷேகம் செய்யப்பட்டுக் கொண்டே இருப்பதால் சிவலிங்கத்திருமேனி வழுவழுப்பாக இருப்பதற்கு பதில் சொர சொரப்பாகவே இருக்கிறது. ஈசன் ஆலகால விஷம் உண்டு தொண்டையில் விஷம் இருப்பதால் அந்த விஷத்தன்மை குறைக்க வேண்டியே இங்கு எண்ணெய் அபிஷேகம் செய்யப்படுகிறது என்பது ஐதீகம். சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்ட உட்கொண்டால் தீராத நோய்களும் குணமாகும்.
கோவில் அமைப்பு: இத்தலத்தில் இராஜ கோபுரம் இல்லை. இரண்டு நுழைவாயிலகள் உள்ளன. முதல் நுழைவாயில், 2-ம் நுழைவாயில் இரண்டிறகும் இடைப்பட்ட பகுதியில் உள்ள பிரகாரத்தில் நந்தி மண்டபம், கொடிமரம் மற்றும் பலிபீடம் உள்ளது. கருவறையில் இறைவன் ஸ்ரீ மனோக்கியநாத சுவாமி சுயம்பு லிங்க உருவில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். இத்தலத்தில் இரண்டு அம்மன் சந்நிதிகள் உள்ளன. ஒரு அம்மனின் பெயர் பக்தனது விருப்பத்தை நிறைவேற்றும் ஸ்ரீபக்தபீஷ்டப்பிரதாயனி என்கிற ஸ்ரீ தவக்கோல அம்மை. 2-வது அம்மனின் பெயர் திருமணக்கோலத்தில் உள்ள ஸ்ரீஅனூபமஸ்தநி என்கிற ஸ்ரீஅழகாம்பிகை.
ஐந்து இலைகள் கொண்ட வில்வமரம் இத்தலத்தின் தலவிருட்சமாக இருந்தாலும், கோயிலின் உட்பிரகாரத்தில் இருக்கும் பலா மரம் சிறப்பு வாய்ந்தது. இது தெய்வீகமான பலா மரம் என்று அழைக்கப்படுகின்றது. அந்த மரத்தில் காய்க்கும் பலாப்பழத்தை அறுத்து அதன் சுளைகளை சுவாமிக்கு நைவேத்தியம் செய்து பின்னர்தான் அதை நாம் சாப்பிட வேண்டும். ஆனால் சுவாமிக்கு நிவேதனம் செய்யாமல் பலாப்பழத்தையே வெளியில் எடுத்துக் கொண்டு போனால் நிச்சயமாக அப்பலாப்பழத்தில் வண்டுகள் உண்டாகிப் பழம் கெட்டுப் போகும் என்று சொல்லப்படுகிறது. பரீட்சித்து பார்ப்பதற்காக மீறி எடுத்துச்சென்று தண்டனை பெற்றவர்களும் உண்டென்று கூறுகிறார்கள்.
இத்தலத்தில் வழிபட்டால் ஆயுள் பலம் கூடும் என்பது ஐதீகம். எம பரிகாரம், ராகு தோஷ பரிகாரங்ள் இத்தலத்தில் பக்தர்களால் செய்யப்படுகிறது. தேவி தீர்த்தம், மார்க்கண்டேய தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், ஷீர குண்டம் என்று நான்கு சிறப்பு வாய்ந்த தீர்த்தங்களை கொண்ட தலமாக இக்கோவில் விளங்குகிறது. மேலும் பிரம்மா, தேவகண்டர், வசிஷ்டர், சூரபத்மன் ,காமதேனு ஆகியோர் வழிபட்டு சாப நிவர்த்தி பெற்ற தலம் என்ற பெருமையும், வருணனும் தேவகன்னியர்களும் பூஜித்து வரம் பெற்ற தலம் என்ற பெருமையும் இத்தலத்திற்கு உண்டு. ஸ்ரீ மனோக்கியநாத சுவாமியை வழிபட்டால் மனஅமைதி கிடைக்கும். கல்யாண வரம், குழந்தை வரம் வேண்டுவோர் இங்கு வந்து இறைவனை வழிபடலாம். பிரிந்திருக்கும் தம்பதியர் இங்குள்ள திருநீலகண்டரை மனமுருக வழிபட்டால் மீண்டும் ஒன்று சேர்ந்து இல்லறம் நடத்துவர். மேலும் வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி ,உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.
இத்தலத்தில் நடைபெறும் சித்திரைப் பெருவிழா சிறப்புடையது. மார்க்கண்டேயருக்கு இத்தலத்தில் சிரஞ்சீவி பதம் தரப்பட்டதால்,அதற்கு நன்றிக் கடனாக மார்க்கண்டேயர் இறைவனை பல்லக்கில் வைத்து இளந்துளை,ஏனாதிமங்கலம், திருநாகேசுவரம், திருபுவனம், திருவிடைமருதூர், மருத்துவகுடி என்று ஊர் ஊராக அழைத்துச் சென்றார்.இவ்விழாவில் பன்னிரண்டாம் நாளில் சுவாமி பல்லக்கில் புறப்பட்டு ஏழூர் சென்று வருவது அற்புதமான காட்சியாகும். இந்த நிகழ்ச்சியை நினைவுகூறும் முகமாகவே இத்தலத்து சித்திரைத் திருவிழா நடத்தப்படுகிறது.(ஏழூர்களாவன - இலந்துறை, ஏனாதிமங்கலம், திருநாகேச்சுரம், திருபுவனம், திருவிடைமருதூர், மருத்துவக்குடீ, திருநீலக்குடி). இத்தலத்தில் பெருமான் மார்க்கண்டேயருக்கு அருள் புரிந்திப்பதால் திருவிழாக்காலத்தில் சுவாமிக்கு முன்னால் எதிர்முகமாக மார்க்கண்டேயர் உற்சவமூர்த்தியாக செல்கிறார்.
திருநீலக்குடி ஸ்ரீ மனோக்கியநாத சுவாமி ஆலயம் புகைப்படங்கள்

முதல் முகப்பு வாயில்

2-வது முகப்பு வாயில், நந்தி மண்டபம்

நந்தி மண்டபம், பலிபீடம், கொடிமரம்

ஸ்ரீபக்தபீஷ்டப்பிரதாயனி சந்நிதி

ஸ்ரீ அனூபமஸ்தநி சந்நிதி

ஸ்ரீ மனோக்கியநாத சுவாமி சந்நிதி

எண்ணெய் அபிஷேகம் செய்ய உபயோகிக்கும் பாத்திரம்

பிரகாரத்தில் பலாமரம்
திருநாவுக்கரசு சுவாமிகள் பாடியருளியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் 5-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. பல்லவ மன்னன் அமணர்களின் ஆலோசனைப்படி அப்பர் பெருமானை கல்லோடு கட்டிக் கடலில் வீழ்த்திய போது, அவர் இத்தலத்து இறைவனைத்தான் ஆத்மார்த்தமாகப் பாடி உயிர்பெற்றதாக இத்தலக் குறிப்பு கூறுகிறது. இத்தலத்து பதிகத்தின் 7-வது பாடலில் அப்பர் இதனைக் குறிப்பிடுகிறார். "அமணர்கள் பேச்சைக் கேட்டு கல்லினோடு என்னைச் சேர்த்துக்கட்டி மன்னர் உத்திரவின்படி கடலில் வீச, என் வாக்கினால் நெல்வளம் உடைய நீண்ட வயல் சூழ்ந்த நீலக்குடி இறைவனுடைய நல்ல நாமத்தைச் சொல்லி நன்றே உய்ந்தேன்" என்று அப்பர் பாடியுள்ளார். மேலும் தனது பதிகத்தில் "தேடிவைத்த செல்வமும், மனைவியும், மக்களும் நீர் இறக்கும் போது உம்முடன் வரார், ஆகையால் நாள் தோறும் நினைத்து தொழுது சிவகதி சேர்வீர் என்றும், உயிர் உடலை விட்டுப் பிரிந்துபோவதற்கு முன்பே, நிழல் உடையதாய்ச் செறிந்த பொழில்களையுடைய நீலக்குடி இறைவனுடைய கழலணிந்த சேவடிகளைக் கைகளால் தொழுது உய்வீர்களாக" என்றும் அறிவுறுத்துகிறார்.
1. வைத்த மாடும் மனைவியும் மக்கள்நீர்
செத்த போது செறியார் பிரிவதே
நித்த நீலக் குடியர னைந்நினை
சித்த மாகிற் சிவகதி சேர்திரே.

2. செய்ய மேனியன் றேனொடு பால்தயிர்
நெய்ய தாடிய நீலக் குடியரன்
மைய லாய்மற வாமனத் தார்க்கெலாங்
கையி லாமல கக்கனி யொக்குமே.

3. ஆற்ற நீள்சடை ஆயிழை யாளொரு
கூற்றன் மேனியிற் கோலம தாகிய
நீற்றன் நீலக் குடியுடை யானடி
போற்றி னாரிடர் போக்கும் புனிதனே.

4. நாலு வேதியர்க் கின்னருள் நன்னிழல்
ஆலன் ஆலநஞ் சுண்டகண் டத்தமர்
நீலன் நீலக் குடியுறை நின்மலன்
கால னாருயிர் போக்கிய காலனே.

5. நேச நீலக் குடியர னேயெனா
நீச ராய்நெடு மால்செய்த மாயத்தால்
ஈச னோர்சர மெய்ய எரிந்துபோய்
நாச மானார் திரிபுர நாதரே.

6. கொன்றை சூடியைக் குன்ற மகளொடு
நின்ற நீலக் குடியர னேயெனீர்
என்றும் வாழ்வுகந் தேயிறு மாக்குநீர்
பொன்றும் போது நுமக்கறி வொண்ணுமே.

7. கல்லி னோடெனைப் பூட்டி அமண்கையர்
ஒல்லை நீர்புக நூக்கவென் வாக்கினால்
நெல்லு நீள்வயல் நீலக் குடியரன்
நல்ல நாமம் நவிற்றியுய்ந் தேனன்றே.

8. அழகி யோமிளை யோமெனு மாசையால்
ஒழுகி ஆவி உடல்விடு முன்னமே
நிழல தார்பொழில் நீலக் குடியரன்
கழல்கொள் சேவடி கைதொழு துய்ம்மினே.

9. கற்றைச் செஞ்சடைக் காய்கதிர் வெண்டிங்கள்
பற்றிப் பாம்புடன் வைத்த பராபரன்
நெற்றிக் கண்ணுடை நீலக் குடியரன்
சுற்றித் தேவர் தொழுங்கழற் சோதியே.

10. தருக்கி வெற்பது தாங்கிய வீங்குதோள்
அரக்க னாருட லாங்கோர் விரலினால்
நெரித்து நீலக் குடியரன் பின்னையும்
இரக்க மாயருள் செய்தனன் என்பரே.

தென்குரங்காடுதுறை (தற்போது ஆடுதுறை என்று பெயர்)அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில்

ஆபத்சகாயேஸ்வரர் ஆடுதுறை


தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்தென்குரங்காடுதுறை (தற்போது என்று பெயர்)
இறைவன் பெயர்
இறைவி பெயர்பவளக்கொடி அம்மை
பதிகம்திருநாவுக்கரசர் - 1
திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது கும்பகோணத்தில் இருந்து 12 கி.மி. தொலைவிலும், மயிலாடுதுறையில் இருந்து 20 கி.மி. தொலைவிலும் ஆடுதுறை என்று வழங்கப்படும் இடத்தில் இத்தலம் இருக்கிறது. அருகில் உள்ள ரயில் நிலையம் ஆடுதுறை. இது கும்பகோணம் - மயிலாடுதுறை ரயில் மார்க்கத்தில் இருக்கிறது. மயிலாடுதுறை - கும்பகோணம் சாலை வழியில் உள்ள ஆடுதுறை பேருந்து நிறுத்தத்தில் இருந்து கும்பகோணம் சாலையில் சிறிது தொலைவு சென்றால் சாலையோரத்தில் உள்ள குளத்தையொட்டி இடப்புறமாகத் திரும்பிச் செல்லும் சாலையில் சென்று வலப்பக்க வீதியில் திரும்பினால் ஆலயம் உள்ளது. ஆடுதுறை பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார் அரை கி.மி. தொலைவு.
ஆலய முகவரி அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில்
ஆடுதுறை
ஆடுதுறை அஞ்சல்
திருவிடைமருதூர் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம்
PIN - 612101

இவ்வாலயம் தினந்தோறும் காலை 7-30 முதல்12 மணி வரையிலும் மாலை 5-30 முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
காவிரி ந்தியின் தென்கரையில் அமைந்துள்ளதாலும், இராமாயணத்தில் வரும் சுக்ரீவன் இங்கு இறைவனை வழிபட்டதாலும் இத்தலம் தென்குரங்காடுதுறை என்று பெயர் பெற்றது. சோழ மன்னன் கண்டராதித்ய சோழனின் மனைவியான செம்பியன் மாதேவியால் கற்றளியாக கட்டுவிக்கப்பட்ட இந்த ஆலயம் கிழக்கு நோக்கியுள்ள 3 நிலை இராஜகோபுரத்துடனும் 2 பிரகாரங்களுடனும் விளங்குகிறது. கோபுர வாயிலைக் கடந்து சென்றால் கொடிமரத்து விநாயகரையும் பலிபீடத்தையும் சிறுமண்டபத்துள்ளே அமைந்துள்ள நந்தியையும் காணலாம். அகன்ற வெளிப் பக்கத்துப் பெரிய பிரகாரத்தை வலம்வந்து உள்ளே சென்றால் மணிமண்டபத்தைக் காணலாம். அம்மண்டபத்தின் தென்புறச் சுவரில் இத்தலத்தின் தேவாரப் பதிகங்களையும் திருப்புகழ்ப் பாடல்களையும் கல்லெழுத்துக்களில் வடித்துள்ளதைக் காணலாம்.
வெளிப் பிரகாரத்தில் விஸ்வநாதர், அம்பாள் விசாலாக்ஷி, விநாயகர், சூரியன், சந்திரன், நவக்கிரகம் மற்றும் முருகன் ஆகியோரின் சந்நிதிகள் அமைந்துள்ளன. அம்பாள் பவளக்கொடி அம்மையின் சந்நிதியும் வெளிப் பிரகாரத்தில் இரண்டாவது வாயிலுக்கு முன்னே தெற்கு நோக்கி அமைந்துள்ளது. அதன் எதிரில் எழுந்தருளியுள்ள பிள்ளையாரையும் தரிசிக்கலாம். உள்ளே சென்றால் எதிரில் தோன்றும் மண்டபத்தின் மேல் மாடப்பத்தியில் சுக்ரீவன் ஆபத்சகாயேசுரரை வணங்கும் காட்சியும், சுக்ரீவனை இறைவன் அன்னப்பறவையாவும் அவன் தேவியை பாரிஜாத (பவளமல்லிகை) மரமாகவும் உருமாற்றியருளிய தல வரலாற்றுக் காட்சி சுதை வேலைப்பாட்டில் அமைந்துள்ளதைக் காணலாம்.
அடுத்துள்ள மூன்றாம் வாயிலைக் கடந்து சென்றால் நேரே பலிபீடமும் நந்தியும் உள்ளன. கருவறை வாயிலில் கம்பீரமாகக் காத்து நிற்கும் புடைச் சிற்பமாக விளங்கும் இரண்டு துவாரபாலகர்களையும் காணலாம். இறைவன் ஆபத்சகாயேஸ்வரரின் சந்நிதி இரண்டாவது உள் பிரகாரத்தில் உள்ளது. இங்கு சிவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மூலவர் குடிகொண்டுள்ள கருவறைச் சுற்றிலும் அகழி போன்ற அமைப்பு இருக்கிறது. கோஷ்ட மூர்த்தங்களாக நர்த்தன விநாயகர், அகத்தியர், தட்சிணாமூர்த்தி, லிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை உள்ளனர். இக்கோயிலைக் கற்கோயிலாக அமைத்த கண்டராதித்தியர் தேவியாரான செம்பியன் மாதேவியார் சிவபிரானை வழிபடுவதாக அமைந்துள்ள புடைச்சிற்பத்தையும் கருவறைச் சுற்றில் காணலாம்.
கருவறை சுற்றுப் பிரகாரத்தில் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளியுள்ள முருகப் பெருமான் சந்நிதி, கஜலட்சுமி சந்நிதி ஆகியவைவ உள்ளன. வடக்கு நோக்கிய சந்நிதியில் எட்டுத் திருக்கரங்களோடு விளங்கிக் காட்சி நல்கும் துர்கா தேவியும், அருகில் கங்கா விசர்சன மூர்த்தியும் பைரவ மூர்த்தியும் இருக்கின்றன. அவற்றின் அருகில் விஷ்ணு துர்க்கை சந்நிதி உள்ளது.
அம்பாள் பவளக்கொடியம்மை சந்நிதியை வலம் வரும்போது பின்புறச் சுவரில் சுக்ரீவன் சிவபூஜை செய்யும் புடைப்புச் சிற்பத்தையும், செம்பியன் மாதேவி சிவபூசை செய்யும் புடைப்புச் சிற்பத்தையும் காணலாம்.
இத்தலத்தின் தலவிருட்சமாக பவளமல்லிகை மரமும், தீர்த்தங்களாக சகாய தீர்த்தம் மற்றும் கோவிலுக்கு எதிரிலுள்ள சூரிய தீர்த்தம் ஆகியவையாகும். ஒவ்வோர் ஆண்டும் சித்திரை மாதம் 5,6,7 தேதிகளில் சூரியனது ஒளிக்கிரணங்கள் சந்நிதிக்கு எதிரில் உள்ள சூரிய தீர்த்தத்தில் பிரதிபலித்துக் கடந்து சுவாமி மீது படுகின்றன. சூரியன், சனி பகவானுக்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அர்ச்சனை செய்துவழிபட்டால் தந்தை மகன் உறவில் உள்ள பிரச்னைகள் தீரும் என்றும், தொழில் மற்றும் பொருளாதாரம் மேம்பட இங்கு பிரார்த்தனை செய்தால் நல்லதே நடக்கும் என்றும் பக்தர்கள் கருதுகின்றனர். பவுர்ணமியில் அகத்தியருக்கு சந்தனாதி தைலம் சாற்றி வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும்.
திருஞானசம்பந்தர் இத்தல இறைவனை தனது பதிகத்தால் பாடி தொழுபவர்கள் வானவர்களோடு உறையும் சிறப்பைப் பெறுவார்கள் என்று குறிப்பிடுகிறார். இத்தலத்து இறைவனை தொழுதால் பற்றுகின்ற தீவினைகள் யாவும் கெட்டுவிடும் என்ற் தனது பதிகத்தில் திருநாவுக்கரசர் குறிப்பிடுகிறார்.